×

உறுப்புதான விழிப்புணர்வு சைக்ளோத்தான் நிகழ்ச்சி: 110 கிமீ தூரம் சைக்கிள் பயணம்

தாம்பரம்: உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதும், உறுப்பு தானம் அளித்த குடும்பங்களை நன்றி உணர்வோடு கவுரவிப்பதும் மற்றும் உறுப்புதானம் செய்ய தாராளமனதோடு முன்வருமாறு அதிக நபர்களை ஊக்குவிக்கும் விதமாக குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனை மற்றும் டபிள்யூசிசிஜி சென்னை சைக்கிளிஸ்ட்ஸ் என்ற சென்னை மாநகரை சேர்ந்த சைக்கிளிங் குழு ஒருங்கிணைந்து ரேலா டெனாசிட்டி 110 கிமீ தூர சைக்ளோத்தான் என்ற நிகழ்ச்சி இன்று அதிகாலை 5.30 மணிக்கு மருத்துவமனை வளாகத்தில் இருந்து துவங்கியது.

ரேலா மருத்துவமனை தலைமை செயல் அலுவலர் இளங்குமரன் கலியமூர்த்தி மற்றும் உறுப்பு தானம் அளித்த நபர்களின் பெற்றோர்கள் நிகழ்ச்சியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். உறுப்பு தானம் அளித்த நபர்களின் பெற்றோர்கள் கவுரவிக்கப்பட்டனர். குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை வளாகத்திலிருந்து தொடங்கிய சைக்கிளிங் குழு, தாம்பரம், பெருங்களத்தூர், படப்பை, ஓரகடம், திருக்கச்சூர், பாலூர், பழைய சீவரம், எழிச்சூர், தெரசாபுரம், குளத்தூர், மணிமங்கலம், முடிச்சூர் வழியாக மீண்டும் குரோம்பேட்டையை அடைந்தது. 110 கிமீ தூரம் நடைபெற்ற சைக்கிள் பயணத்தில் 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர்.

ரேலா மருத்துவமனை தலைமை செயல் அலுவலர் இளங்குமரன் கலியமூர்த்தி பேசுகையில், “சைக்கிளிங் செய்வது மற்றும் உறுப்பு தானம் அளிப்பது என்ற 2 விஷயங்களுக்கும் அடிப்படையான மதிப்பீடுகளாக இருப்பவை ஒற்றுமை, விழிப்புணர்வு மற்றும் முன்னேற்றம் இந்த மூன்று அம்சங்களின் ஒருங்கிணைந்த சாரத்தை ரேலா டெனாசிட்டி உள்ளடக்கி சைக்ளோத்தான் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. உடலுறுப்பு தானம் பலரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும். இதன் வழியாக உயிர் தானம் என்ற கருணையின் உச்சகட்ட நடவடிக்கையை தாராள மனதோடு செய்த நபர்களின் நினைவை போற்றி அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம்.

இதன் மூலம் பிறரும் உறுப்பு தானம் அளிக்க உத்வேகம் பெறவேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். ரேலா மருத்துவமனையில் கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சைக்காக 193 நபர்களும், சிறுநீரக உறுப்புமாற்று சிகிச்சைக்காக 114 நபர்களும் காத்திருப்பு பட்டியலில் இருக்கின்றனர். ஆனால், கடந்த ஆண்டில் தமிழ்நாடு முழுவதிலும் வெறும் 156 உறுப்பு தான நிகழ்வுகளே நடைபெற்றிருக்கின்றன” என்றார்.

The post உறுப்புதான விழிப்புணர்வு சைக்ளோத்தான் நிகழ்ச்சி: 110 கிமீ தூரம் சைக்கிள் பயணம் appeared first on Dinakaran.

Tags : awareness ,Tambaram ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...